Sep 1, 2018

காதல் புனிதமானதா?

ஒரு மிகவும் அருமையான, நான் விரும்பிய கட்டுரையை இந்த வாலண்டியன்ஸ் டே அன்று வெளியிட வேண்டும் என்று ஆசை, ஆதலால்தான் இந்த பதிவு... பொதுவா காதலை பற்றி எவ்வளவோ சொல்வார்கள், ஒரு மிகவும் வித்யாசமாக காதலை பற்றி...


'நான் காதலிக்கிறேன்... பாசமாக இருக்கிறேன்... நேசத்தில் கசிந்து உருகுகிறேன்...' என்று நினைக்கிறீர்களா? இந்த இடுகை உங்களுக்கானதுதான்.
மனிதன் ஒருபோதும் சிந்திப்பதுமில்லை: காதலிப்பதுமில்லை: பாசம் செலுத்துவதுமில்லை: தோழமையோடு பழகுவதுமில்லை... இதுதான் உண்மை. மேம்பட்ட விலங்கு என்பது தவிர மனிதனுக்கு வேறு எந்த சிறப்புத் தகுதியும் கிடையாது.

சிந்திப்பது மட்டுமே மனிதனை விலங்குகளிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது என்று சொல்பவராக நீங்கள் இருந்தால், ஒரு நிமிடம்... நிஜமாகவே நீங்கள் சிந்திக்கிறீர்களா?

ஒரு புத்தகமோ, ஒரு உரையாடலோ, ஒரு இசையோ, ஒரு மவுனமோதான் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. அதாவது தூண்டுவதற்கு எதுவுமே இல்லாவிட்டால் நமக்கு 'சிந்தனையே' வராது. நம்மை சிந்திக்கத் தூண்டிய புத்தகத்தையோ, இசையையோ வடித்த மனிதனுக்கு கூட வேறு ஏதேனும் ஒன்று தூண்டுதலாக இருந்திருக்கும். மொத்தத்தில் கூட்டு 'சிந்தனையின்' தொகுப்பே மனித விலங்கின் பரிணாம வளர்ச்சி அல்லது நாகரீகம் அல்லது அனைத்து தத்துவங்களின் உள்ளடக்கம்.

இந்த இடத்தில்தான் மொழியின் சிக்கல் விஸ்வரூபம் எடுக்கிறது. உதாரணமாக 'அம்மா' என்று ஒருவரை அழைக்கும்போதே மற்றவர்கள் யாரும் அம்மா இல்லை என்பதை உணர்த்துகிறோம். எதிர்பாலினத்தை 'காதலிப்பதாக' சொல்லும்போதே மற்றவர்கள் யாரையும் காதலிக்கவில்லை என்பதை அழுத்தமாக உணர்த்துகிறோம். ஒருவரை நேசிக்கும்போதே வேறு யாரையும் அந்த இடத்தில் வைக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். மொத்தத்தில் ஒவ்வொரு வார்த்தையும் அதற்கான எதிர்மறையை தனக்குள் சுமந்து கொண்டே அலைகிறது.

இப்படி புனிதமாக நாம் நினைக்கும் அனைத்துமே வெறும் புடலங்காய்தான் என்றால் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், உண்மை அதுதான். உண்மையில் தன்னைத் தவிர வேறுயாரையும் யாரும் காதலிப்பதுமில்லை, நேசிப்பதுமில்லை. சுயநலமாக வாழ்வது மட்டுமே இயல்பானது. அடுத்தவரை வீழ்த்த நாம் நடத்தும் நாடகமே வாழ்க்கை. வாழ்க்கையின் அர்த்தமே அடுத்தவர் முன்னேறாமல் தடுப்பதுதான். மனதின் சந்தோஷமே அடுத்தவரின் வீழ்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது. மொத்தத்தில் விலங்குகளின் இயல்பே மனித இயல்பு. ஒன்று சிங்கமாகவோ, சிறுத்தையாகவோ மாறி அடுத்தவரை வேட்டையாட வேண்டும். அல்லது அடுத்தவர் நம்மை வேட்டையாட அனுமதிக்க வேண்டும். விலங்குகளின் இந்த இயல்பே 'மனித' இயல்பு. அப்படி இருக்கக் கூடாது என்று 'சிந்திக்க்கும்போது'தான் மன அவஸ்தைகளும் குற்ற உணர்ச்சிகளும் அதிகரிக்கின்றன.

புனிதம் என்று காலம்காலமாக நம்பப்பட்டும், பேசப்பட்டும் வரும் விஷயம் காதல். உண்மையில் காதலைப் போன்ற பம்மாத்தான விஷயம் வேறு எதுவுமே இல்லை. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். தனக்குள் இருக்கும் பெண்ணின் பிரதிபலிப்பை வேறொரு பெண்ணிடம் 'சாயலாக'க் காணும் ஆண், அவளை 'காதலிப்பதாக' நினைக்கிறான். அவளை அடைவதன் மூலம், வேறொரு ஆணிடம் அவள் போவதை தடுக்கிறான். இதே தியரியை பெண்ணுக்கும் பொருத்தலாம்.

பிரச்னை என்னவென்றால் ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும், தனக்குள் இருக்கும் மறுபாதியை 'பலரிடமும்' காண்பதுதான். அதனால்தான் 'அனுபவம்' கூடக் கூட, காதல் உணர்வு வளர்ந்து கொண்டே போகிறது. மறுபாதியை காணும்போதெல்லாம் காதல் உணர்ச்சி பெருக்கெடுக்கிறது.
பரிணாம வளர்ச்சியில் இந்த உண்மையை ஆண், பெண் இருவருமே உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் 'காதலுக்காக' வகுக்கப்பட்ட பல வார்த்தைகள் இன்று செல்லரித்துப் போய் ஆவணக் காப்பகங்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

இன்று சராசரியாக ஒவ்வொருவரும் 12 அல்லது 13 வயது முதலே மறுபாதியை எதிர்கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். அதுமுதலே 'காதல்' உணர்வு அரும்ப ஆரம்பித்துவிடுகிறது. அதனால்தான் 23 வயதுப் பெண்ணிடம் ஒரு ஆண் காதலிப்பதாக சொல்லும்போது அவள் சிரிக்கிறாள். 'வேணாம்பா நாம ஃபிரெண்ட்சா இருப்போம்...' என்கிறாள். அவளுக்குத் தெரியும் போகப் போக இதுபோல இன்னும் பலரை எதிர்கொள்ள நேரிடும் என்று.

ஒவ்வொருவரும் இன்று நேரில், தொலைபேசியில் அல்லது செல்லில், மெயிலில், சாட்டில் எதிர்பாலினத்தை சேர்ந்த பலரிடமும் தினமும் பேசுகிறார்கள், பழகுகிறார்கள். எதற்காக பேசுகிறோம், சிரிக்கிறோம் என்பது இருவருக்குமே தெரியும். ஆனாலும் தெரியாததுபோல நடந்து கொள்வதில் இருக்கும் சுவாரஸ்யம், அந்த உறவை அனுமதிக்கிறது. தப்பித் தவறி யாராவது ஒருவர் வெளிப்படுத்தும்போது, திடுக்கிடுவது போல் காட்டிக்கொள்வது நமது 'புனிதத்தை' காப்பாற்ற உதவுகிறது.

உண்மையில் அன்றாடம் நாம் சந்திப்பவர்களில் அல்லது உரையாடுபவர்களில் நமது எதிர்காலத்துக்கு யார் 'உதவு'கிறார்களோ அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்க மனம் அனுமதிக்கிறது. இன்றைய தேதியில் திருமண மையங்களில் பதிவு செய்பவர்கள் கூட, இன்ன தகுதியுடைய, இன்ன வேலை செய்யக்கூடிய வரன்தான் தேவை என்பதை தெளிவாக கேட்டுப் பெறுகிறார்கள். 'காதலிப்பதாக' சொல்பவர்கள் கூட சாதாரணமானவர்களை காதலிப்பதில்லை. 'தகுதி'யானவர்களை, தங்கள் எதிர்காலத்துக்கு 'பயன்'படக் கூடியவரை மட்டுமே காதலிக்கிறார்கள்.

பரஸ்பர உதவிகளே காதலின் அடித்தளம். இந்தத் 'தகுதி'யும், 'பயனும்' ஆறு போல ஓடிக்கொண்டிருக்கும் வரைத்தான் 'காதல் உறவும்' நீடிக்கும். குட்டையைப் போல் தேங்கிவிட்டால் உறவும் நாறி, பிரிவை நோக்கி நகர்ந்துவிடும்.

'தோழமையும்' இந்தவகைதான். 'தேவையறிந்து உதவுபவன்' மட்டுமே நண்பனாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவான். உதவாதவன் 'விரோதி' பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பான். இப்படி உதவுபவனும் 'சாகும் வரை' உதவ வேண்டும். அப்போதுதான் அவன் 'உயிர் நண்பன்!'

எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்போதுதான் சந்தோஷம் பிறக்கிறது. எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது துக்கம் தொண்டையை அடைக்கிறது. அப்படியானால் துக்கமும் சந்தோஷமும் கூட கற்பிதம்தானே? மனது ஏற்கும் விஷயம் சரியாகவும், ஏற்க அச்சப்படும் விஷயம் தவறாகவும் அர்த்தமாகும்போது, உணர்வுகளும் பொய்யாக அல்லவா போகிறது?

நன்றி, விசுவாசம், நேர்மை, நியாயம்... போன்ற வார்த்தைகள் புனிதமல்ல. ஒரு செயலை செய்ய அச்சப்படும்போது நம்மை நாமே சமாதானப்படுத்துவதற்காக உச்சரிக்கப்படும் வார்த்தைகள் அவை. அவ்வளவுதான்.

விசுவாசிகளை தலைவன் கூட நம்புவதில்லை. தலைவனைத் தவிர வேறு யாரையும் இந்த சமூகம் அங்கீகரிப்பதுமில்லை. இந்த 'விலங்கின்' இயல்பை ஏற்றுக் கொண்டவன் 'புத்திசாலி'. ஏற்கத் தயங்கி 'யோசிப்பவன்' முட்டாள்!

இந்த சமூகத்தில் வேட்டையாடத் தெரிந்தவன் மட்டுமே வாழத் தகுதியானவன். வேட்டையாட அஞ்சுபவன் வாழத் தகுதியற்றவன். நீங்கள் வேட்டையாட விரும்புகிறீர்களா? அல்லது வேட்டையாடப்பட விரும்புகிறீர்களா? இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பதை பொறுத்து உங்கள் 'எதிர்காலம்' அமையும்...



நன்றிகள் ...

No comments:

Post a Comment

Comment moderation not enabled in this blog, Before posting kindly consider your comment SHOULD NOT hurt others feelings and don’t use any terrible words. I dont be publish your comment if you deny above statement.

Thanks for visit and comment

நீங்கள் வெளிபடுத்தும் பின்னூட்டம் (comment) அடுத்தவர் மனதை, நம்பிக்கையை புண்படுத்தாமல் இருத்தல் நலம், தவறான வார்தைகளை உபயோகப் படுத்த வேண்டாம். தவறாக இருப்பின் உங்களது பின்னூட்டம் நீக்கபடும்.

தமிழில் எழுத!

வரவிற்க்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.